செய்திகள்
வில்லரசம்பட்டி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரிக் வாகனங்கள்

சீசன் நேரத்தில் வேலை இல்லாமல் நிறுத்தப்பட்டு உள்ள ‘ரிக்’ வாகனங்கள்

Published On 2020-05-16 20:34 IST   |   Update On 2020-05-16 20:34:00 IST
கொரோனா காரணமாக சீசன் நேரத்தில் ‘ரிக்’ வாகனங்கள் வேலை இல்லாமல் நிறுத்தப்பட்டு உள்ளதாக வாகன உரிமையாளர் கூறினார்.
ஈரோடு:

இந்திய அளவில் ஆழ்குழாய் கிணறு தோண்டும் ‘ரிக்’ வாகனங்கள் அதிக அளவில் உள்ள பகுதி திருச்செங்கோடு, ஈரோடு, ராசிபுரம். திருச்செங்கோட்டில் உள்ள ‘ரிக்’ வாகனங்கள் பெரும்பாலும் வடமாநிலங்களில் ஆழ்குழாய் தோண்டும் பணியில் இருக்கும். ஈரோடு, ராசிபுரம் பகுதிகளில் இருந்து தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களில் ஆழ்குழாய்கள் தோண்டி வருகின்றன. தற்போது ஈரோட்டில் உள்ள ‘ரிக்’ வாகனங்கள் அனைத்தும் வேலை இன்றி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இதுபற்றி ‘ரிக்’ வாகன உரிமையாளர் லோகநாதன் என்பவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 25 ‘ரிக்’ வண்டிகள் உள்ளன. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு தோண்டும் பணியில் இங்கிருந்து செல்லும் வாகனங்கள்தான் ஈடுபடுகின்றன. வழக்கமாக கோடை காலம் தொடங்கி விட்டால் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு ‘ரிக்’ வாகனம் மூலம் 3 ஆழ்குழாய் கிணறுகள் தோண்டும் பணி நடைபெறும். ஆண்டு சராசரி பார்த்தால் ஒரு வாகனம் மூலம் 200 ஆழ்குழாய்களாவது தோண்டும் பணி நடைபெறும்.

தற்போது கோடை காலம் உச்ச நிலையில் உள்ளது. இது ‘ரிக்’ வாகனம் வைத்து இருப்பவர்களுக்கு உச்சகட்ட பணி நடைபெறும் நேரமாகும். ஆனால் கொரோனா காரணமாக 2 மாதங்களாக ஒரு ஆழ்குழாய் கிணறுகூட தோண்டவில்லை. இது ‘ரிக்’ உரிமையாளர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு ‘ரிக்’ வாகனம் ரூ.1 கோடியே 80 லட்சம் விலையாகிறது. இது முழுமையாக வங்கிக்கடனில் வாங்கப்படுகிறது. ஒரு ‘ரிக்’ வாகனத்துக்கு டிரைவர் உள்பட 10 பேர் பணியில் இருப்பார்கள். ‘ரிக்’ இயங்கினால் மட்டுமே இவர்கள் அனைவருக்கும் சம்பளம் கொடுத்து, கடன் தவணையும் செலுத்த முடியும். தற்போதைய நிலவரப்படி ஆழ்குழாய் கிணறு தோண்ட ஒரு அடிக்கு ரூ.62 கட்டணம் உள்ளது. 500 அடிக்கு மேல் ஒவ்வொரு 100 அடிக்கும் ஒரு அடிக்கு தலா ரூ.10 முதல் ரூ.30 வரை கட்டண உயர்வு இருக்கும்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இடத்துக்கு தகுந்தபடி தண்ணீர் கிடைக்கும் ஆழம் வேறுபடும். சராசரியாக 600 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும். தற்போது வேலை இல்லாததால் வங்கி தவணை செலுத்த முடியவில்லை. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் சிரமமாக இருக்கிறது.

தொழில் நடந்து கொண்டு இருந்தால் பாதிப்பு தெரியாது. ஆனால், இப்போது மிகவும் சிரமமாக இருக்கிறது. இப்போது கோடை என்பதால் ஓய்வு இல்லாமல் வேலை செய்ய வேண்டிய நேரம். ஆனால் கொரோனா காரணமாக இதுவரை ஒரு வேலையும் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News