செய்திகள்
அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் மண்பானை தயாரிக்கும் பணி நடைபெறாமல் இருப்பதை காணலாம்

கோடை காலத்திலும் வாடும் மண்பாண்ட தொழிலாளர்கள்

Published On 2020-05-16 20:18 IST   |   Update On 2020-05-16 20:18:00 IST
ஊரடங்கால் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளதால் கோடை காலத்திலும் மண்பாண்ட தொழிலாளர்கள் வருமானமின்றி வாடி வருகிறார்கள்.
அந்தியூர்:

அந்தியூர் புதுப்பாளையம், வேம்பத்தி, தவிட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மண்பாண்டம் செய்யும் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு மண்பானைகள், அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் மண்பானைகள் கோடை காலத்தில் குளிர்ந்த தண்ணீரை பருகுவதற்காகவும், கோவில் திருவிழாவின்போது அக்னி சட்டி எடுத்து வருவதற்காகவும், பொங்கல் பானைகளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் கார்த்திகை மாதம் அகல் விளக்குகள் அதிகமாகவும் தயாரிக்கப்படுகிறது. எனவே சீசனுக்கு ஏற்றப்படி மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் கடந்த 1½ மாதமாக வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இதனால் மற்ற தொழில்களை போலவே மண்பாண்டங்களின் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் மண்பானைகளின் விற்பனை அதிகமாக காணப்படும். ஆனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடப்பதால், மண்பானைகளை வாங்க ஆட்கள் இல்லை.

இதுகுறித்து மண்பாண்டங்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், மண்பானைகள் செய்வதற்கு தேவையான மண்ணை வெளியில் இருந்து எடுத்து வரவும், உற்பத்தி செய்த மண்பானைகளை வெளியூர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லவும் முடிவதில்லை. மேலும் கிராம மக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கி இருப்பதால், யாரும் அவர்களது கிராமத்தை விட்டு வெளியே வருவதில்லை. பொதுவாக கோடை காலம் தொடங்கியது என்றாலே, ஈரோடு, கோபிசெட்டிபாளையம், ஆப்பக்கூடல், பர்கூர் என பல்வேறு இடங்களில் இருந்து மண்பானைகளை வாங்கி செல்வார்கள். தற்போது மண்பானைகளை வாங்குவதற்கு கூட ஆட்கள் இல்லை.

ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட மண்பானைகள் தேக்கம் அடைந்து உள்ளது. இதனால் மேற்கொண்டு மண்பானைகளை உற்பத்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு அரசின் சார்பில் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News