ஜிப்மர் டாக்டரை மானபங்கம் செய்த 7 வாலிபர்கள் கைது
புதுச்சேரி:
புதுவை தட்டாஞ்சாவடி வீமன்நகரை சேர்ந்த ஒரு பெண் ஜிப்மரில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் பணி முடிந்து ரெட்டியார் பாளையம் ஆருத்ராநகரில் உள்ள தோழியை பார்க்க ஸ்கூட்டரில் சென்றார். அப்போது 2 வாலிபர்கள் இவரது ஸ்கூட்டரை இடிப்பது போல் முந்தி செல்ல முயன்றனர். இதனை டாக்டர் தட்டிக்கேட்டபோது அந்த வாலிபர்கள் தகராறு செய்தனர்.
இதனால் பயந்து போன அந்தபெண் டாக்டர் இதுபற்றி தன்னுடன் பணிபுரியும் ஒரு டாக்டருக்கு போன் செய்து வரவழைத்தார். அந்த டாக்டர் வாலிபர்களிடம் தட்டிக்கேட்டுகொண்டு இருக்கும்போது அவர்கள் தனது நண்பர்கள் 5 பேரை வரவழைத்தனர். அவர்கள் 7 பேரும் சேர்ந்து பெண் டாக்டரை மானபங்கம் செய்து தட்டி கேட்ட டாக்டரை தாக்கினர். மேலும் அவரது காரை சேதப்படுத்தினர்.
இதுகுறித்து அந்த பெண் டாக்டர் ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில் பெண் டாக்டரை மானபங்கம் செய்து தட்டி கேட்ட டாக்டரை தாக்கிய 7 பேர் கவுண்டன்பாளையம், எல்லைப்பிள்ளை சாவடி, தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.