செய்திகள்
கோஷ்டி மோதல்

குண்டுபாளையத்தில் சிகரெட் பிடித்த தகராறில் மோதல்- 8 பேர் மீது வழக்கு

Published On 2020-05-03 15:50 IST   |   Update On 2020-05-03 15:50:00 IST
குண்டுபாளையத்தில் சிகரெட் பிடித்த தகராறில் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை குண்டுபாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஜெகதீசன். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த ஜெகதீசன் தற்போது ஊரடங்கு உத்தரவால் அந்த நிறுவனம் மூடப்பட்டதால் வீட்டிலேயே பேக்கரி வகைகளை தயார் செய்து குடும்பத்துடன் விற்று வருகிறார்.

இதற்கிடையே ஜெகதீசனுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் வீட்டு வாடகை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. அப்போது வீட்டு உரிமையாளருக்கு ஆதரவாக ஜெகதீசனின் பக்கத்து வீட்டை சேர்ந்த சண்முகம் பேசி வந்தார். இதனால் ஜெகதீசன் குடும்பத்துக்கும் சண்முகம் குடும்பத்துக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சண்முகம் நேற்று ஜெகதீசன் வீட்டின் அருகே சிகரெட் புகைத்து கொண்டிருந்தார். இதனை ஜெகதீசன் மற்றும் அவரது தாய் சுசீலா, மகள் ஸ்ரீதேவி, மகன் ராமகிருஷ்ணன் ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதில் சண்முகம் குடும்பத்தினருக்கும், ஜெகதீசன் குடும்பத்தினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த சித்ரா, சுதா, ஆனந்த் ஆகிய 4 பேரும் சேர்ந்து ஜெகதீசனின் குடும்பத்தினரை தாக்கினர். பதிலுக்கு ஜெகதீசனின் குடும்பத்தினரும் சண்முகத்தின் குடும்பத்தினரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இருதரப்பினரும் கோரிமேடு போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News