செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனாவில் இருந்து சிவகங்கை மாவட்டம் தப்பியது எப்படி?

Published On 2020-04-30 11:10 IST   |   Update On 2020-04-30 11:10:00 IST
கொரோனா தாக்குதலில் இருந்து சிவகங்கை மாவட்டம் தப்பியது எப்படி? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.
சிவகங்கை:

கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிப்படைத்து, முடக்கி போட்டுள்ளது. அதில் இந்தியாவும், அதில் தென் கோடி மாநிலமான தமிழகமும் தப்பவில்லை.

தூங்கா நகரம் என்ற பெயரை கொண்ட மதுரையில் கொரோனா வைரஸ் தாக்கம் இருந்து வரும் நிலையில், மதுரையையொட்டி உள்ள சிவகங்கை மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டம் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

அதாவது, கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் சிவகங்கை மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. முதலில் அந்த மாவட்டத்தில் 12 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அதற்கு மேல் அந்த எண்ணிக்கை அதிகரிக்காமல் நின்று விட்டது. இதில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 11 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர். ஒருவர் சிகிச்சையில் உள்ளார்.

இதனால் தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் சிவகங்கை தன்பக்கம் ஈர்த்து உள்ளது. இதுகுறித்து சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் அறிகுறிகள் வந்த உடனேயே மாவட்ட நிர்வாகம் அதை எதிர் கொள்ள தயார் ஆகிவிட்டது. மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், போக்குவரத்து துறை, காவல்துறை என அனைத்து துறையினரையும் அழைத்து பேசி, அனைவரும் ஒருங்கிணைந்து தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதில் முக்கியமாக பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும், இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சீனா உள்பட பல்வேறு நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் 1-ந் தேதிக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்த 5 ஆயிரத்து 11 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களை 28 நாட்கள் சுகாதாரத்துறையினர் சென்று காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்று தொடர்ந்து கண்காணித்தனர். இந்த 28 நாட்களும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் நோய் தொற்று பரவுவது தவிர்க்கப்பட்டது.

மேலும் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களில் 41 பேர் கண்டறியப்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

கொரோனா வைரஸ் 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டதும், அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்களால் சமூக பரவல் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டது.

அத்துடன் அவர்கள் வசித்த பகுதிகள் முழுமையாக சீல் வைக்கப்பட்டது. கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றவர்கள் குணம் அடைந்தாலும், அந்த பகுதிகளில் 28 நாட்களுக்கு மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது. இதன் மூலம் நோய் பரவல் முற்றிலும் தவிர்க்கப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி துறையினருடன் இணைந்து தினமும் வீடு வீடாக சென்று அங்குள்ள யாருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்று கண்காணித்து வந்தனர். இன்று வரை இந்த பணி தொடர்கிறது.

மேலும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகள், 3 நகராட்சிகள் மற்றும் 12 பேரூராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கபசுர குடிநீர் தொடர்ந்து 3 நாட்கள் வழங்கப்பட்டது.

அதுதவிர போலீசார் உதவியுடன் தெருக்களில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. இவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் அது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காத வகையில், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நோய் தவிர்ப்பு நடவடிக்கையில் மக்களின் ஒத்துழைப்பு நன்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு ஊழியர்களும், அயராது பாடுபட்டனர். பஸ்கள் இல்லாத நிலையில் அவர்களுக்கு என்று தனி பஸ்கள் இயக்கப்பட்டன. அனைத்து துறை ஊழியர்கள் ஆதரவால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் கட்டுக்குள் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News