செய்திகள்
ரங்கசாமி

இலவச அரிசியை வழங்க ரூ.5 கோடி பேக்கிங் செலவா?- ரங்கசாமி கண்டனம்

Published On 2020-04-24 15:34 IST   |   Update On 2020-04-24 15:34:00 IST
புதுவையிலுள்ள அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் மீண்டும் உடனடியாக ரூ.5 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என்று ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு நீட்டிப்பால் வீட்டில் முடங்கியுள்ள பலரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் புதுவையிலுள்ள அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் மீண்டும் உடனடியாக ரூ.5 ஆயிரம் அரசு வழங்க வேண்டும்.

மத்திய அரசு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி தர உத்தரவிட்டு 30 நாட்களாகியும் இன்னும் புதுவையில் தரப்படவில்லை. ஏழை மக்களுக்கு வழங்க மத்திய அரசு 9425 மெட்ரிக் டன் அரிசி புதுவைக்கு வழங்கியும் இதுவரை 2500 மெட்ரிக் டன் அரிசி மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 7500 மெட்ரிக் டன் அரிசியை பேரிடர் காலத்துக்குள் எவ்வாறு வழங்குவீர்கள்..? என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

இலவச அரிசியை ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வழங்கியிருந்தால் இந்த நடைமுறை சிக்கல் இருந்திருக்காது. அத்துடன் அரிசியை பேக்கிங் செய்ய ரூ. 5 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொகையை ரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கியிருந்தால் அவர்கள் வாழ்த்தியிருப்பார்கள். அரிசியை மூட்டையில் பேக்கிங் செய்ய ரூ. 5 கோடி செலவிடப்பட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது. சிவப்பு ரேசன் அட்டைக்கே இந்த நிலையென்றால் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரேசன் அரிசி கிடைக்க எத்தனை மாதமாகும் என்று தெரியவில்லை. அவசர காலத்தில் கூட ரேசன் கடைகளை பயன்படுத்தாமல் இருப்பது தவறானது. இதை அரசு உணர்ந்து உடனே ரேசன் கடைகளை திறக்க வேண்டும்.

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 70 ஆயிரம் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை தருவது போல் பதிவு செய்யாத 1½ லட்சம் பேருக்கும் உதவித் தொகை தர வேண்டும். ஊரடங்கால் தவிக்கும் மக்களுக்கு 3 மாதங்களுக்கு மின்கட்டணத்தையும், குடிநீர் வரியையும் ரத்து செய்ய வேண்டும்.

மத்திய அரசு அறிவித்துள்ளது போல் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் ரூ. 50 லட்சம் காப்பீடு வழங்க வேண்டும். குப்பை வாரும் துப்புரவு தொழிலாளர்களுக்கும் காப்பீடு திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ரங்கசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.

Similar News