செய்திகள்
வாலிபர் மரணம்

கொரோனா வார்டில் இறந்த வாலிபரின் உடலை புதைக்க எதிர்ப்பு

Published On 2020-04-20 12:24 IST   |   Update On 2020-04-20 12:24:00 IST
கொரோனா வார்டில் இறந்த வாலிபரின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் கொண்டு சென்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நம்பியூர்- கோவை ரோடு பகுதியில் 20 வயது மதிக்க தக்க வாலிபர் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் அவினாசி ஆகும். கடந்த 6 வருடங்களாக நம்பியூரில் வசித்து வந்தார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார். அவரது மருத்துவ அறிக்கையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து இறந்த வாலிபரின் உடலை நம்பியூரில் அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் கொண்டு சென்றனர். இதற்கு நம்பியூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.

அவர்கள் இங்கு உடலை புதைக் கூடாது. வாலிபரின் சொந்த ஊரான அவினாசிக்கு கொண்டு செல்லட்டும் என்றனர். தகவல் கிடைத்ததும் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், டி.எஸ்.பி. தங்கவேல், நம்பியூர் தாசில்தார் வெங்கடேசன், வட்டார ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அவர்கள் வாலிபரின் மரணம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவரின் உடலை வெளியே அனுமதிக்க மாட்டார்கள் என எடுத்து கூறினார்கள். இதனை பொதுமக்கள் ஏற்று கொள்ளவில்லை. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

நள்ளிரவு 1 மணி வரை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து வாலிபரின் உடலை கோபி செட்டிப்பாளையத்தில் உள்ள மயானத்திற்கு எடுத்து சென்றனர். அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Similar News