செய்திகள்
கொரோனா வைரஸ்

கவுந்தப்பாடி - சத்தியமங்கலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மண்டல சிறப்பு கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

Published On 2020-04-17 19:59 IST   |   Update On 2020-04-17 19:59:00 IST
கவுந்தப்பாடி - சத்தியமங்கலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் சென்று அங்குள்ள பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மண்டல சிறப்பு கண்காணிப்பு குழு தலைவர் வெங்கடேஷ் மற்றும் வணிக குற்றப் புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் லட்சுமி ஆகியோர் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி பெருந்துறை பகுதிக்குட்பட்ட ரே‌ஷன் கடைகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நிவாரண பொருட்கள் வழங்குவது குறித்தும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூய்மை பணிகள் குறித்து ஆய்வு செய்து கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை பார்வையிட்டனர்.

அதைத் தொடர்ந்து கவுந்தப்பாடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் சென்று அங்குள்ள பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் ஜம்பை வட்டார மருத்துவ அலுவலர் தனலட்சுமி, பவானி வட்டார வளர்ச்சி துணை அலுவலர் கணேஷ்பிரியா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், செவிலியர்கள் உடன் இருந்தனர்.

மேலும் சத்தியமங்கலம் பகுதியில் 16 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 2071 குடும்பங்களைச் சேர்ந்த 60 ஆயிரத்து 768 நபர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ சேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கும் சென்று பார்வையிட்டனர்.

Similar News