செய்திகள்
கைது

புதுவை அருகே நடுரோட்டில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட போலீசாருக்கு மிரட்டல்

Published On 2020-04-08 15:31 IST   |   Update On 2020-04-08 15:31:00 IST
புதுவை அருகே நடுரோட்டில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட போலீசாருக்கு மிரட்டல் விடுத்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு:

புதுவை அருகே ஆரோவில்லை அடுத்து இடையன்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் அப்பகுதியில் மரவாடி நடத்தி வருகிறார்.

இவருக்கு மேகநாதன், செங்கேணி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு இருந்து வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு பொதுவான இடத்தில் உள்ள முந்திரி தோப்பில் முந்திரி கொட்டை பொறுக்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு இருவரும் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து ஆரோவில் போலீசார் இருவரையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் இனிமேல் இதுபோன்ற தகராறு செய்து கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தி அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு இருவரையும் எச்சரித்தபோது அவர்கள் போலீசாரை திட்டி மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகநாதன், செங்கேணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.

Similar News