செய்திகள்
முதல்வர் நாராயணசாமி.

புதுவையில் 3 ஆயிரத்து 25 பேரை தனிமை படுத்தி கண்காணிப்பு- நாராயணசாமி தகவல்

Published On 2020-04-04 16:01 GMT   |   Update On 2020-04-04 16:01 GMT
புதுவை முழுக்க 3 ஆயிரத்து 25 பேர் தனிமை படுத்தி கண்காணிப்பில் உள்ளனர் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர்  நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையிலிருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியோரில் 6 பேரில் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் ஆகிய 17 பேருக்கு கொரோனா தொற்று இல்லை. இதேபோல் காரைக்காலில் டெல்லி சென்று திரும்பிய 7 பேருக்கும் பாதிப்பு இல்லை. 

புதுவை முழுக்க 3 ஆயிரத்து 25 பேர் வீட்டுக்காவலில் கண்காணிப்பில் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து வந்தோர், டெல்லி சென்று வந்தோரை தொடர்பு கொண்டோரும் இதில் அடங்குவர். காரைக்கால், ஏனாம், மாகி பிராந்தியங்களில்  கொரோனா தொற்று யாருக்கும் இல்லை. புதுவையில் 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்றுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அனைத்து ரேசன் அட்டைத்தாரர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளோடு கலந்து பேசி மகளிர் குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் கடன்  வழங்க வலியுறுத்தியுள்ளோம். வங்கிகளும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. இதற்கான வட்டி 7 சதவீதத்தில் 3 சதவீத வட்டியை மாநில அரசு ஏற்கும். இதனை நகர் பகுதி சுயஉதவி குழுக்களுக்கும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் ஹெக்டேருக்கு ரூ. 25 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 4 கோடி செலவாகும். கொரோனா சிகிச்சைக்கு முக்கிய தேவையான வெண்டி லேட்டர், உடைகவசங்கள், மானிட்டர்கள், முககவசம் கிடைக்காததால் அதை தயாரிக்கும் தொழிற்சாலை களுக்கு அரசு நிலத்தில் சலுகையும், முதலீட்டு மானியம் 30 சதவீதம் வரிசலுகை, உற்பத்தி மானியம் தரப்படும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
Tags:    

Similar News