செய்திகள்
கடலூர் முதுநகரில் 10 ரூபாய்க்கு விற்ற வெங்காயத்தை வாங்குவதற்கு அலைமோதிய மக்களை படத்தில் காணலாம்.

கடலூர் முதுநகரில் 10 ரூபாய்க்கு 1 கிலோ வெங்காயம் விற்பனை

Published On 2019-12-11 10:35 GMT   |   Update On 2019-12-11 12:30 GMT
கடலூர் முதுநகரில் 10 ரூபாய்க்கு 1 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. இதை அறிந்த பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கி சென்றனர்.

கடலூர்:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெங்காயம் பெரும் தட்டுப்பாடாக இருந்து வந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் வெங்காயம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடலூர் பான்பரி மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். இத்தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு 4 கிலோ முதல் 20 கிலோ வரை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வெங்காயம் வாங்கி சென்றனர்.

இதனால் 3 மணி நேரத்தில் 20 டன் வெங்காயம் விற்றுதீர்ந்தது.


இன்று காலை கடலூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாய் என்றும், 5 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என விளம்பர பதாகையில் எழுதப்பட்டிருந்தது.

இன்று காலை உழவர் சந்தைக்கு வந்த மக்கள் ஒரு கடையில் 5 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என்று எழுதப்பட்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்து வாங்கிசென்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடலூர் முதுநகர் பகுதியில் 10 ரூபாய்க்கு வெங்காயம் விற்பதாக வியாபாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அறிந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடலூர் முதுநகர் விரைந்தனர். அந்த பகுதியில் பக்தவச்சலம் மார்க்கெட்டு முன்பு கடலூர்- சிதம்பரம் சாலையில் வேலு என்பவர் 25 வெங்காய மூட்டைகளை இறக்கி 1 கிலோ வெங்காயம் ரூ. 10-க்கு கிடைக்கும் என்று பதாகையில் எழுதி வைத்திருந்தார்.

இதனை அறிந்ததும் பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கினர். ஒருகட்டத்தில் பொதுமக்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த பகுதி பிரதான சாலை என்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News