செய்திகள்
தரைப்பாலத்தில் கரை புரண்டு ஓடும் காற்றாற்று வெள்ளத்தை படத்தில் கணாலாம்.

சுத்தமல்லி தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்கள் அவதி

Published On 2019-12-01 17:53 GMT   |   Update On 2019-12-01 17:53 GMT
விளாங்குடி- கா.அம்பாபூர் இடையே உள்ள சுத்தமல்லி தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே விளாங்குடி- கா.அம்பாபூர் சாலை இடையே சுத்தமல்லி தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தை கா.அம்பாபூர், காவனூர், காத்தான்குடிகாடு, புதூர், பாளையக்குடி, அய்கால், கிளிமங்கலம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் விவசாயத்திற்கு தேவையான மூலப்பொருட்களை இந்த தரைப்பாலம் வழியாக கொண்டு செல்லவும், கொண்டுவரவும் விவசாயிகள் பயன்படுத்திவருகின்றனர். மேலும் காத்தான்குடிகாட்டில் உள்ள அரியலூர் அண்ணா பொறியியல் கல்லூரியில் படிக்கும் கல்லூரி மாணவ- மாணவிகளும் பஸ் வசதி இல்லாத காரணத்தால் தரைப்பாலம் வழியாக நடந்து, கல்லூரிக்கு செல்கின்றனர். விளாங்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வாரத்திற்கு ஒருமுறை கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக வருவதற்கும் இந்த தரைப்பாலம் பயன்படுகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதில் விளாங்குடி- கா.அம்பாபூர் இடையே உள்ள சுத்தமல்லி ஓடையில் காற்றாற்று வெள்ளம் கரைபுரண்டு செல்கின்றது. இதனால் நேற்று அதிகாலை அப்பகுதி பொதுமக்கள் பாலத்தை கடக்க முடியாலம் மழைவெள்ளம் வடியும் வரை பல மணி நேரம் காத்திருந்தனர். மேலும் அரியலூர் அண்ணா பொறியியல் கல்லூரியில் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தரைப்பாலத்தில் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தால் மாணவ- மாணவிகளும் தேர்வு எழுத செல்லமுடியாமல் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில், விளாங்குடி- கா.அம்பாபூர் இடையே சுத்தமல்லி தரைப்பாலம் உள்ளது என எந்த அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் விளாங்குடியிலிருந்து அண்ணாபொறியியல் கல்லூரி வரை உள்ள மின்கம்பங்களில் மின் விளக்கு பழுதால் சாலை முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இந்த பாலத்தை கடக்கும் போது மழைபெய்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பாலத்தை கடக்கும் போது மழைவெள்ளம் பொதுமக்களை அடித்து செல்லும் அபாயமும் உள்ளது என்றனர்.

மேலும் பொதுமக்கள் கூறுகையில், விளாங்குடியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் கா.அம்பாபூர் பாதையில் சுத்தமல்லி ஓடை தரைப்பாலத்தின் அருகே மயான கொட்டகை உள்ளது. எங்கள் ஊரில் இறந்தவரின் உடலை கொண்டு செல்லும் போது கனமழை காரணமாக தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் இறந்தவரின் உடலை மழைவெள்ளம் வடியும் வரை சாலையில் வைத்து காத்திருந்து, பின்னர் தரைப்பாலத்தை கடந்து உடலை அடக்கம் செய்யும் நிலை உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து விளாங்குடி- கா.அம்பாபூர் இடையே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News