செய்திகள்
கோப்பு படம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் - ரூ.70 ஆயிரம் அபராதம் வசூல்

Published On 2019-11-13 10:09 GMT   |   Update On 2019-11-13 10:09 GMT
நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.70 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் உள்ளிட்ட 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

இந்த பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுரைப்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது, பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பது, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனையை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட 34 குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களையும், 18 கிலோ பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்து ரூ.70 ஆயிரத்து 450 அபராதம் விதிக்கப்பட்டது.

இனிவரும் காலங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணிகளின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏ.டி.எம்.,களை பயன்படுத்திட வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News