செய்திகள்
கேரட்

நீலகிரி மாவட்டத்தில் கேரட், பூண்டு, இஞ்சிக்கு பயிர்க்காப்பீடு செய்யலாம்- கலெக்டர் தகவல்

Published On 2019-11-08 14:02 GMT   |   Update On 2019-11-08 14:02 GMT
நீலகிரி மாவட்டத்தில் கேரட், பூண்டு, இஞ்சிக்கு பயிர்க்காப்பீடு செய்யலாம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்ட விவசாயிகள் உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், பூண்டு ஆகியவைகளுக்கு பயிர் காப்பீடு செய்ய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது :-

நீலகிரி மாவட்டத்தில் 6000 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி பயிர்களான உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், பூண்டு போன்ற பயிர்களும், கூடலூர் பகுதியில் இஞ்சி, வாழை மற்றும் மரவள்ளி பயிர்களும் அதிக அளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கண்ட பயிர்களுக்கு அதிக முதலீடு தேவைப்படுவதால் எதிர்பாராத விதமாக ஏற்படும் மகசூல் பாதிப்புகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். மகசூல் இழப்பீட்டிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டம் நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு காரிப் பருவத்தில் 2333 விவசாயிகள் 963 ஹெக்டர் பரப்பில் பயிர்க்காப்பீடு செய்துள்ளனர். அண்மையில் ஊட்டி வட்டாரம் பாலடா பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் பாதிப்படைந்த விவசாயிகள், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நாள்வரை பயிர்க்காப்பீடு செய்துள்ள 16 விவசாயிகளுக்கு ரூ. 276319 காப்பீடு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விசாயிகளுக்கு பயிர் அறுவடை பரிசோதனையின் மூலம் பெறப்படும் மகசூலை கணக்கில் கொண்டு விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட உள்ளது.

இது போன்று எதிர்பாராத விதமாக ஏற்படும் வெள்ளம், வறட்சி, புயல், பனி, ஆலங்கட்டி மழை போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து விவசாயிகள் தங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீடு திட்டம் உதவியாக உள்ளது.

மேலும் வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்பட்ட 1362 விவசாயிகளுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து காய்கறி பயிர்களுக்கு 1 ஹெக்டேர் பரப்பிற்கு ரூ. 13,500வீதம் மொத்தம் ரூ. 58 லட்சம் நீலகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே நீலகிரி மாவட்ட மக்கள் அனைவரும் எதிர்பாராத விதமாக நிகழும் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தின் அரசாணை ராபி பருவத்திற்கு வரும் பட்சத்தில் உருளைக்கிழங்கு, கேரட் முட்டைகோஸ், பீட்ரூட், பூண்டு, இஞ்சி, வாழை ஆகிய பயிர்களுக்கு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பங்குகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News