செய்திகள்
பயனற்ற ஆழ்துளை கிணறு

ரோட்டோரம் இருந்த ஆழ்துளை கிணற்றின் மீது பெரிய கல்லை வைத்த பொதுமக்கள்

Published On 2019-11-01 05:34 GMT   |   Update On 2019-11-01 05:34 GMT
மூடப்படாத ஆழ்துளை கிணற்றை பொதுமக்கள் அருகில் இருந்த பெரிய கல்லை தூக்கி வைத்து மூடி விட்டனர்.

அந்தியூர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பலியானான்.

தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்குப்பிறகு பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்தால் தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கலெக்டர் கதிரவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பருவாச்சி ஊரில் இருந்து அம்மன்பாளையம் செல்லும் ரோட்டில் ஆட்டுக்காரன்புதூர் என்ற ஊரில் ரோட்டோரமாக பயன்பாடு இல்லாமல் ஒரு ஆழ்துளை கிணறு இருந்தது.

இப்படி ரோட்டோரம் பயன்பாடு இல்லாமல் இருந்த அந்த ஆழ்துளை கிணறு அதிகாரிகள் யார் கண்ணிலும் படவில்லை.

இதற்கிடையே அந்த வழியாக சென்ற பொது மக்கள் இதை கண்டு திடுக்கிட்டனர்.

சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்ததை கண்டு வேதனையில் இருந்த அந்த வழியாக சென்ற மக்கள் அருகில் கிடந்த பெரிய பாறாங்கல்லை தூக்கி திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றின் மீது வைத்து மூடி விட்டனர்.

இதனால் அப்பகுதியில் இருந்த அச்சம் நீங்கி உள்ளது.

இந்த செயல்படாத ஆழ்துளை கிணற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.

Tags:    

Similar News