செய்திகள்
ஆற்று வெள்ளத்தில் பிணத்தை சுமந்து சென்ற காட்சி

வேலூர் அருகே ஆற்று வெள்ளத்தில் இறங்கி பிணத்தை சுமந்து சென்ற கிராம மக்கள்

Published On 2019-09-21 16:02 GMT   |   Update On 2019-09-21 16:02 GMT
வேலூர் அருகே ஆற்று வெள்ளத்தில் இறங்கி பிணத்தை கிராம மக்கள் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தையொட்டி அகரம் ஆறு ஓடுகிறது. இந்த ஊரில் யாராவது இறந்து விட்டால் ஆற்றை கடந்துதான் மறுகரையில் உள்ள இடுகாட்டிற்கு உடலை எடுத்துச்செல்ல வேண்டும்.

இதனால் அந்த பகுதியில் பாலம் கட்டிதர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை அந்த பகுதியில் பெய்த மழையால் அகரம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில் சேர்பாடியை சேர்ந்த அய்யா பிள்ளை என்பவரது மனைவி கருப்பாயி என்ற பச்சையம்மாள் (வயது 90) இறந்து விட்டார். அவரது உடலை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அகரம் ஆற்றில் இடுப்பளவுக்கு ஓடும் வெள்ள நீரில் இறங்கி சுமந்து மறுகரைக்கு சென்றனர். அதன்பின் இறுதிச்சடங்கு நடந்தது.

இதுபோன்ற நிலையில் திடீரென வெள்ளம் அதிகரித்தால் பிணத்தை தூக்கிச்செல்பவர்கள் அதில் அடித்துச் செல்லப்படும் நிலை உள்ளது. இதனால் பாலத்தை விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம், நந்தகுமார் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News