செய்திகள்
கொலை

தேவகோட்டையில் வாலிபர் வெட்டிக்கொலை- நண்பருக்கு வலைவீச்சு

Published On 2019-09-20 12:41 IST   |   Update On 2019-09-20 12:41:00 IST
தேவகோட்டையில் முன்விரோதம் காரணமாக வாலிபரை வெட்டிக்கொலை செய்த நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சிவன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகன் சிவமணி அய்யப்பன் (வயது 33). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த வினோத் (28) என்பவரும் பள்ளி பருவத்தில் இருந்தே நண்பர்கள். இருவரும் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்கள்.

இந்த நிலையில் சில பிரச்சனைகளால் சிவமணி அய்யப்பன் தனக்கு சூனியம் வைத்ததாக வினோத் கருதினர்.

இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த முன் விரோதத்தால் சில மாதங்களுக்கு முன்பு சிவமணி அய்யப்பனின் சகோதரரை வினோத் அரிவாளால் வெட்டினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வினோத்தை கைது செய்தனர்.

சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த வினோத் மீண்டும் சிவமணி அய்யப்பனிடம் தகராறு செய்தார்.

நேற்று இரவு தேவகோட்டை-திருப்பத்தூர் சாலையில் உள்ள தியேட்டர் அருகில் ஓட்டலுக்கு சிவமணி அய்யப்பன் தனது நண்பருடன் சென்றார்.

அப்போது அங்கு வந்த வினோத் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் சிவமணி அய்யப்பனின் தலையில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி உமா, சப்-இன்ஸ்பெக்டர்கள் மருதுபாண்டி, செல்லமுத்து தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Similar News