செய்திகள்
மழை

அரக்கோணத்தில் விடிய விடிய கன மழை - 166 மி.மீட்டர் கொட்டியது

Published On 2019-09-19 05:23 GMT   |   Update On 2019-09-19 05:23 GMT
அரக்கோணத்தில் விடிய விடிய பெய்த கன மழையால் அதிகபட்சமாக 166 மில்லி மீட்டர் மழை பதிவானது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நள்ளிரவு 2 மணியளவில் மாவட்டம் முழுவதும் திடீரென மழை பெய்ய தொடங்கியது. பல இடங்களில் சாரல் மழையாக பெய்தது.

அரக்கோணத்தில் பலத்த மழை கொட்டியது. முதலில் சாரலாக தொடங்கிய மழை நேரம் செல்ல பலத்த மழையாக கொட்டியது. தொடர்ந்து பெய்த மழை விடிய விடிய கொட்டியது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அரக்கோணம் நகர பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. அந்த பகுதிகள் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.

பொதுமக்கள் வாகனங்கள் ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலையிலும் மழை நீடித்ததால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்த படியும் சிலர் நனைந்தபடியும் சென்றனர்.

இதேபோல் காவேரிப்பாக்கம், சோளிங்கர், காட்பாடி, ஆற்காடு, வேலூர், பொன்னை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 166 மில்லி மீட்டர் மழை பதிவானது.

வேலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பொன்னை சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் பொண்ணையாற்றில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த வெள்ள நீரை தேக்கி வைக்க தடுப்பணைகளை கட்ட வேண்டும். ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

வேலூர் 25.2, அரக்கோணம் 166, ஆம்பூர் 3.2, வாணியம்பாடி 17, ஆலங்காயம் 4.2, காவேரிப்பாக்கம் 38.4 , வாலாஜா 16.2, சோளிங்கர் 42, ஆற்காடு 38.2, குடியாத்தம் 4.21, காட்பாடி 55.77, அம்முண்டி 38, கேத்தாண்டபட்டி 3.8, வடபுதுபட்டு 6.4 மேல் ஆலத்தூர் 2.6.

Tags:    

Similar News