செய்திகள்
வெளிநாட்டு சிகரெட்களுடன் காட்பாடியில் பிடிபட்ட 3 பேரை போலீசார் பிடித்து சென்ற காட்சி

ரூ.35 லட்சம் வெளிநாட்டு சிகரெட் காட்பாடியில் பிடிபட்டது

Published On 2019-09-17 17:12 IST   |   Update On 2019-09-17 17:12:00 IST
சென்னைக்கு கடத்தி வந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் காட்பாடியில் பிடிபட்டது. இது குறித்து 3 பேரிடம் வணிகவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
வேலூர்:

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து பெங்களூரு செல்லும் 'நியூ டின்சுகியா' எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது.

முதலாவது நடை மேடையில் வந்து நின்ற ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர். அப்போது 3 பேர் ஒரு பெட்டியில் இருந்து டிராவல் பேக்குகளை வேகவேகமாக இறக்கினர்.

இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பார்த்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சென்று டிராவல் பேக்குகளில் இருப்பது குறித்து கேட்டனர். அதற்கு அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை.

அதையடுத்து போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 3 பேரிடமும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி தீவிர விசாரணை நடத்தினார். அதில் அவர்கள் 3 பேரும் சென்னை ராயபுரம் முல்லை நகரை சேர்ந்த கார்த்திக் (30), பாலமுருகன் (28), சுப்பிரமணி (36) என்பதும், பட்டதாரி இளைஞர்களான 3 பேரும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த சிகரெட்டுகளை தமிழகத்தில் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

அசாம் மாநிலத்தில் இருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்திருந்தனர். ஆனால் சென்னை ரெயில் நிலையத்தில் போலீஸ் சோதனை அதிகமாக காணப்படுவதால், காட்பாடி ரெயில் நிலையத்துக்கு கொண்டு வந்து காரில் சென்னைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அவ்வாறாக சிகரெட்டுகளை ரெயிலில் காட்பாடிக்கு கொண்டுவந்தபோது போலீசாரிடம் பிடிபட்டதும் தெரியவந்தது.

அதையடுத்து போலீசார் 13 டிராவல் பேக்குகளில் இருந்த ரூ.35 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். ஒரு சிகரெட் பெட்டியின் (பாக்ஸ்) விலை ரூ.3 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

வேலூர் வணிகவரி செயலாக்கம் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் பெட்டிகள் மற்றும் 3 வாலிபர்கள் ஒப்படைக்கபட்டனர்.

அவர்களிடம் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தபட்டது குறித்து வணிகவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News