செய்திகள்
கொலை செய்யப்பட்ட குமரேசனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

திருப்பத்தூரில் சுமை தூக்கும் தொழிலாளி கொலை - உறவினர்கள் சாலை மறியல்

Published On 2019-09-03 10:26 GMT   |   Update On 2019-09-03 10:26 GMT
திருப்பத்தூரில் சுமை தூக்கும் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால் மகன் குமரேசன் (வயது 35). இவர் கடைகளுக்கு பலசரக்கு ஏற்றி செல்லும் லாரிகளில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஷீலா என்ற மனைவியும், 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.

குமரேசனும், சக தொழிலாளி ஒருவரும் நேற்று மாலை வேலை முடிந்ததும் ஓரிடத்தில் அமர்ந்து கூலிப்பணத்தை பிரித்து கொண்டிருந்தனர். அப்போது குமரேசனின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் வேலுவின் மகன் சூர்யா (20) அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவரை பார்த்த குமரேசன் இந்த வழியாக நீ ஏன் செல்கிறாய்? என கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த குமரேசன், சூர்யாவை கையால் அடித்துள்ளார்.

நீ என்னையே அடித்து விட்டாயா? எனக் கேட்டு கடும் கோபமடைந்த சூர்யா நேராக வீட்டுக்கு ஓடிச்சென்று ஒரு கத்தியை எடுத்து வந்து குமரேசனை சரமாரியாக குத்தினார்.

ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த குமரேசனை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக குமரேசனின் மனைவி ஷீலா திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தப்பியோடிய வாலிபர் சூரியாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை குமரேசனின் உறவினர்கள் சேலம்- திருவண்ணாமலை கூட்ரோட்டில் மறியல் செய்தனர்.

கொலையாளி சூர்யாவை கைது செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

விரைவில் கொலையாளியை கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News