செய்திகள்
தீ விபத்து

தேவகோட்டையில் காய்கறி மார்க்கெட்டில் தீ விபத்து- 10 கடைகள் எரிந்து நாசம்

Published On 2019-08-30 10:46 GMT   |   Update On 2019-08-30 10:46 GMT
தேவகோட்டை காய்கறி மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டு 10 கடைகள் எரிந்து சேதமடைந்தன. லட்சக்கணக்கான பொருட்களும் தீக்கிரையானது.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் அருகில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்டோர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். பெரும்பாலான கடைகள் கீற்று கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மார்க்கெட்டில் உள்ள நாகராஜன் என்பவரின் காய்கறி கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கீற்று கொட்டகை என்பதால் தீ மளமளவென அருகில் உள்ள மற்ற கடைகளிலும் பரவியது.

அப்போது அந்த வழியாக தேவகோட்டை டவுன் போலீசார் ரோந்து வந்தனர். மார்க்கெட்டில் தீ எரிவதை பார்த்த அவர்கள் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 45 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் மார்க்கெட்டில் இருந்த காய்கறி, பேன்சி, இறைச்சி கடைகள் என 11 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையானது.

தீ விபத்து சம்பவம் தொடர்பாக தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சமூக விரோதிகள் யாரேனும் தீவைத்து சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News