செய்திகள்
விபத்து

ஆலங்குளம் அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி

Published On 2019-07-27 18:53 IST   |   Update On 2019-07-27 18:53:00 IST
ஆலங்குளம் அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆலங்குளம்:

பாளை வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை மகன் அலெக்ஸ்(வயது 20). புதுக்குளத்தை சேர்ந்த சிவபெருமாள் மகன் வினோத்(23). கல்லூரி மாணவர்களான இருவரும் நேற்று இரவு குற்றாலத்திற்கு குளிக்க சென்றனர். அங்கு அருவிகளில் குளித்துவிட்டு இன்று காலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அலெக்ஸ் ஓட்டினார். காலை 6 மணியளவில் மாறாந்தை பகுதியில் வந்தபோது, தூத்துக்குடியில் இருந்து குற்றாலம் நோக்கி சென்ற வேன் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். வினோத்திற்கு தலையில் பலத்த காயமும், அலெக்சுக்கு வலது கை, இடது காலில் முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சீதபற்பநல்லூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத் பரிதாபமாக உயிரிழந்தார். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து வேன் டிரைவரான தூத்துக்குடி பண்டாரக்குளத்தை சேர்ந்த ஜெபத்துரையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News