செய்திகள்
பாலியல் தொந்தரவு

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு- தலைமறைவான ஆசிரியரை பிடிக்க போலீசார் தீவிரம்

Published On 2019-07-27 12:15 GMT   |   Update On 2019-07-27 12:15 GMT
பவானி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பவானி:

பவானி அருகேயுள்ள குருப்பா நாயக்கன் பாளையம் விதைப்பண்ணை அருகே வசித்து வருபவர் செல்லமுத்து. இவரது மகன் சக்திவேல் (வயது 47). இவர் பவானி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தாவரவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியான சில்மி‌ஷங்கள் செய்தும் பள்ளி மாணவிகளிடம் இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதாக மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து சம்பவத்தன்று காலை வகுப்பு நேரத்தில் பவானி திருவள்ளுவர் நகர் பகுதியைச் சார்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவியிடம் ஆசிரியர் சக்திவேல் இரட்டை அர்த்தத்தில் பேசிய தாகவும் மேலும் வேண்டுமென்றே ஒரு மாணவியை கீழே தள்ளி தூக்கி விடுவது போல அவர் முதுகில் கைவைத்து மாணவியை தூக்கி விட முயன்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியை மோகனாவிடம் இது குறித்து புகார் அளித்தனர்.

மேலும் தலைமை ஆசிரியை சக்திவேல் குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் மாணவியின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் பள்ளியை விட்டு வெளியே செல்ல மாட்டோம் என்று சொல்லி தலைமை ஆசிரியை அறையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் அங்கு வந்து மாணவியின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில் மாணவியின் பெற்றோர் இதுகுறித்து பவானி காவல் நிலையத்தில் எழுத்து மூலம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந் திரன் விசாரணை நடத்தினார்.

பின்னர் புகார் குறித்து ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று காலை ஆசிரியர் சக்திவேல் பள்ளிக்கு வந்த பின்பு யாரிடமும் சொல்லாமல் பள்ளியை விட்டு வெளியேறி விட்டார் என்றும் ஆசிரியர் சக்திவேல் பள்ளி மாறுதல் பெற்று விட்டார் என்றும் மேலும் அவர் தலைமறைவாகி விட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News