செய்திகள்
ஈரோடு கொல்லம்பாளையத்தில் புதர் மண்டி கிடக்கும் சிறுவர் பூங்கா.

ஈரோடு நேதாஜி வீதியில் பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்கா

Published On 2019-07-15 18:17 GMT   |   Update On 2019-07-15 18:17 GMT
ஈரோடு நேதாஜி வீதியில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது.
ஈரோடு:

ஈரோடு கொல்லம்பாளையம் நேதாஜி வீதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 2008-ம் ஆண்டு சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியாக ஊஞ்சல், சறுக்கு போன்றவைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காக பூங்காவில் நடைபாதையும் உள்ளது.

இந்த பூங்காவிற்கு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் காலையும், மாலையும் வந்து ஆனந்தமாக விளையாடி வந்தனர். பொதுமக்கள் நடைபயிற்சியிலும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை. இதன் காரணமாக பூங்காவிற்குள் இழந்தை மரம் மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது.

மேலும் ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களும் உடைந்து கிடக்கிறது. இதனால் அங்கு விளையாட செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. நடைபாதையும் பொதுமக்கள் நடக்க முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக காணப்படுவதால் நடைபயிற்சிக்கும் யாரும் செல்வதில்லை.

விளையாடுவதற்கு வேறு இடம் இல்லாததால் ஒரு சில குழந்தைகள் மட்டும் அந்த சிறுவர் பூங்காவிற்கு சென்று விளையாடி வருகிறார்கள். அவர்கள் விளையாடும்போது அங்குள்ள இலந்தை மரத்தின் முட்கள் குத்தி அவர்களுக்கு ரத்த காயமும் ஏற்படுகிறது. எனினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்கள் அங்கு விளையாடி வருகிறார்கள்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் இந்த பூங்காவை தவிர வேறு பூங்கா கிடையாது. இதனால் எங்கள் குழந்தைகள் வேறு வழியின்றி இந்த பூங்காவிற்கு சென்று விளையாடி வருகிறார்கள். இங்கு இலந்தை மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளதால் அவற்றின் முட்கள் எங்கள் குழந்தைகளை குத்தி விடுகிறது.

மேலும் பூங்கா புதர் மண்டி கிடப்பதால் பாம்பு, பூரான் போன்றவைகளும் உள்ளன. இதனால் எங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சிறுவர் பூங்காவில் வளர்ந்துள்ள இலந்தை மரம் உள்ளிட்ட செடி, கொடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News