செய்திகள்
பெண்ணாடத்தில் பலத்த மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2019-07-10 04:55 GMT   |   Update On 2019-07-10 04:55 GMT
கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் மழையினால் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வீட்டில் இருந்து வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தனர். இரவு நேரங்களிலும் காற்று இல்லாமல் புழுக்கமாக இருந்ததால் சிரமத்துக் குள்ளாகினர்.

இந்த நிலையில் கடலூரில் நேற்று இரவு 8 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு பலத்த காற்று வீசியது. இரவு 10 மணி முதல் லேசாக மழை தூறியது. அதன் பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் பலத்த மழை பெய்தது. ½ மணி நேரம் இந்த மழை நீடித்தது. அதன் பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது. மழை காரணமாக கடலூரில் பெரும்பாலான பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

ஸ்ரீமுஷ்ணம், காவனூர், தேத்தம்பட்டு, குணமங்கலம், புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 8 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 1 மணி நேரம் பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதைத்தொடர்ந்து இரவிலும் லேசாக மழை தூறிக்கொண்டே இருந்தது.

பெண்ணாடம், திட்டக்குடி, ராமநத்தம், ஆவட்டி, ஆவினங்குடி, இறையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இரவு 7 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. 2½ மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக் கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் தற்போது பெய்த இந்த மழையால் அந்த பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் நேற்று விழுப்புரத்தில் காலை முதல் வெயில் சுட்டெரித்தது. மாலை 3 மணிக்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 3.30 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் 15 நிமிடம் தூறிக்கொண்டே இருந்தது. அதன் பிறகு மாலை 6 மணிக்கு மேல் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இதே போல் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.

கடும் வெயிலினால் அவதியடைந்த மக்கள் தற்போது பெய்த இந்த திடீர் மழையினால் குளிர்ந்த காற்று வீசுவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News