செய்திகள்
தேரை வடம்பிடித்து இழுக்கும் பக்தர்கள்

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது

Published On 2019-07-07 04:19 GMT   |   Update On 2019-07-07 07:40 GMT
ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலின் தேரோட்டம், பக்தர்களின் சிவ சிவ கோஷத்துடன் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.
சிதம்பரம்:

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சனமும் விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் இந்தாண்டுக்கான ஆனித்திருமஞ்சன விழா கடந்த 27-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் தங்கம், வெள்ளி, பூத, ரிஷப, யானை உள்ளிட்ட வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நிகழ்ச்சியும், கடந்த 3-ந் தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.
 
கடந்த 4-ம் தேதி கஜபூஜை நடைபெற்றது. இதையொட்டி கும்பகோணம் கோவிலில் இருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு யானை வரவழைக்கப்பட்டது. மாலையில் யாகசாலையில் கஜ பூஜை நடந்தது. இதில் யானைக்கு பட்டாடை அணிவித்து, சந்தனம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் யானை, நடராஜருக்கு மலர் தூவி வணங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.

8-ம் நாள் விழாவான நேற்று காலை தங்க ரதத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும, இரவில் பிஷாடனர், வெட்டுங் குதிரை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.

ஆனித்திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை வெகு சிறப்பாக தொடங்கியது. இதில் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளினார்.

மேலும், விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். இந்த 5 தேர்களையும் திரளாக கூடியிருந்த பக்தர்கள் சிவ சிவா என்ற கோஷம் எழுப்பியபடி வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆனித்திருமஞ்சனம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகமும், அதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News