செய்திகள்

தாளவாடி அருகே விவசாய நிலத்தில் குவியல் குவியலாக எலும்பு துண்டுகள் - மனித எலும்புகளா?

Published On 2019-06-25 06:23 GMT   |   Update On 2019-06-25 06:23 GMT
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே விவசாய நிலத்தில் குவியல் குவியலாக கிடந்த எலும்பு துண்டுகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப் பகுதி தாளவாடி அடுத்த தர்மாபுரம் பகுதியில் அதிக அளவில் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் மஞ்சள், வாழை, மிளகாய் பயிர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் திடீரென துர்நாற்றம் வீசியது. இதில் சிலருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டது. அப்போது ஒரு விவசாய தோட்டத்தில் கரும்புகை வந்தது. இதை கண்ட அவர்கள் அந்த பகுதிக்கு சென்றனர்.

அங்கு சென்று பார்த்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் குவியல் குவியலாக கழிவுகள் மற்றும் எழும்பு துண்டுகள் இருந்தது.

அந்த கழிவுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் கடும் துர்நாற்றம் வீசி உள்ளது. தொடர்ந்து தூர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தை கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஒருவர் குத்தகைக்கு எடுத்தார். சில நாட்கள் கழித்து லாரிகள் மூலம் மூட்டை மூட்டையாக கழிவுகள் அவர் விவசாய நிலத்தில் கொட்டபட்டது. நாங்களும் விவசாய நிலத்துக்கு தேவையான குப்பையாக இருக்கும் என்று நினைத்து விட்டோம்.

தற்போது அந்த கழிவுகளை தீ வைத்த போது தான் துர்நாற்றம் வீசுகிறது. அந்த கழிவு குவியலில் எழும்பு துண்டுகள் அதிக அளவில் உள்ளது. இது மாடுகளின் எழும்புகளா? அல்லது மனித எழும்புகளா? என எங்களுக்கு அச்சமாகவும், சந்தேகமாகவும் உள்ளது.

எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இந்த பகுதிக்கு வந்து உரிய ஆய்வு மேற் கொண்டு எங்கு இருந்து கழிவுகள் கொண்டு வரப்பட்டது? என விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News