செய்திகள்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் விவசாய பணியை செய்து வரும் நாகை மாணவி

Published On 2019-06-21 06:03 GMT   |   Update On 2019-06-21 06:03 GMT
கடும் சிரமத்திற்கு இடையே நடந்து முடிந்த நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார் நாகை வேளாங்கண்ணியை சேர்ந்த மாணவி ஒருவர்.
நாகப்பட்டினம்:

தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பையும் மீறி ‘நீட் ’தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் ஏழை மாணவ மாணவிகளின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

அதேநேரத்தில் மிகப்பெரிய சவாலாகவே தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆனால் கடும் சிரமத்திற்கு இடையே நடந்து முடிந்த நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார் நாகை வேளாங்கண்ணியை சேர்ந்த மாணவி ஒருவர்.

வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபாலன். இவரது மகள் சுபா. தமிழ்வழி கல்வியில் முழுவதும் பள்ளி படிப்பை முடித்தார்.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் மருத்துவர் ஆக வேண்டும் என்பதையே சிறு வயதில் இருந்து லட்சியமாகக் கொண்டு உள்ளார்.

இவரது கனவில் இடியாய் விழுந்தது நீட் தேர்வு மட்டுமல்ல பொருளாதாரமும் தான். கடும் சிரமத்தை சந்தித்து நடந்து முடிந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

இதனால் எப்படியும் தனது டாக்டர் கனவை நிறைவேற்றலாம் என்று எண்ணியிருந்த அவருக்கு வீட்டின் பொருளாதார நெருக்கடியால் பின்வாங்கியுள்ளார்.


தற்போது மாணவி சுபா தனது மருத்துவ கனவை மறந்து தாய் தந்தையோடு இணைந்து விவசாயப் பணியை மேற்கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கஜா புயலினால் விவசாயம் முற்றிலும் பொய்த்து போனதால் நாகை மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்ப சூழலை நினைத்தே மாணவி சுபா, தாயுடன் இணைந்து விவசாய பணியை மேற்கொண்டு வருகிறார்.

நான் சிறு வயதிலிருந்தே டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்து வந்தேன். தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பொருளாதார சூழ்நிலையில் மருத்துவ படிப்பு கனவு கானல்நீராகி விட்டது. இதனால் தாய்- தந்தையுடன் இணைந்து விவசாய வேலையை செய்து வருகிறேன். வீட்டு செலவுக்காக தாயுடன் 100 நாள் வேலைக்கும் சென்று வருகிறேன். கஷ்டத்தில் வாழ்ந்து வரும் எனக்கு அரசு உதவி செய்தால் மருத்துவ படிப்பை தொடர முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி சுபாவின் தாய் வள்ளி கூறியதாவது:-

எனது மகளின் மருத்துவ கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இருமகள்களின் படிப்பு செலவிற்காக நிலம் மற்றும் வீட்டின் பத்திரங்களை தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து கடும் சிரமத்துடன் வாழ்க்கை நடத்தி வருகிறோம்.



கடந்த ஆண்டில் கஜா புயலால் எங்களது மரம் செடி, கொடிகள் அனைத்தும் நாசமாகி விட்டது. மேலும் விவசாயமும் முற்றிலும் பொய்த்து போனதால் வருவாய் இழந்து, 100 நாள் வேலைக்கு சென்று வருகிறேன்.

தற்போது மகளின் மருத்துவ கனவையும் சிதைத்து அவளையும் 100 நாள் வேலைக்கு அழைத்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

கடும் சிரமத்திற்கு இடையே தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் இந்த சூழலில், நீட் தேர்வில் வெற்றி பெற்றும் ஏழ்மை நிலையால் படிப்பை தொடர முடியாமல் இருக்கும் நாகை மாணவிக்கு தமிழக அரசு உதவ முன் வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Tags:    

Similar News