செய்திகள்

நாகை அருகே அதிரடி சோதனை- சாராயம் கடத்தி வந்த 8 பேர் கும்பல் தப்பி ஓட்டம்

Published On 2019-06-19 13:50 GMT   |   Update On 2019-06-19 13:50 GMT
நாகை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் கடத்தி வந்த 8 பேர் கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் சாராயம் கடத்தலை தடுக்க கோரி நாகை மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் பத்ரிநாராயாணன் அறிவுறுத்தலின் படி சிறப்பு தனிப்படை பிரிவு சப்-இன்ஸ் பெக்டர் ராஜேஷ் தலைமையில் இன்று நள்ளிரவு நாகூர் கிழக்கு கடற்கரை சாலை வெட்டாற்று பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். 

அப்போது காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி 2 மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த 4 பேர், போலீசாரை கண்டவுடன் வாகனத்தை அங்கே விட்டு விட்டு அருகில் இருந்த ஆற்றில் குதித்து தப்பித்து சென்று விட்டனர். இதையடுத்து  2 மோட்டார் சைக்கிள் மற்றும் 3 சாராய மூட்டைகளை பறிமுதல் செய்து நாகூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதை தொடர்ந்து நாகூர் அடுத்த முட்டம் பகுதியில் துணை கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் வாகன சோதனை தொடர்ந்து மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு சவுக்காடு வழியாக தப்பித்து சென்று விட்டனர். 

இதை கண்ட போலீசார் அந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவர்கள் கடத்தி வரப்பட்ட 500 லிட்டர் கொண்ட 6 மூட்டை சாராயத்தையும் கைப்பற்றினர்.
Tags:    

Similar News