செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும்- தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.

Published On 2019-06-18 03:52 GMT   |   Update On 2019-06-18 03:52 GMT
அடிமட்ட தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பு இல்லையென்றால் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார்.
ஈரோடு:

முன்னாள் அமைச்சரும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் கூறியதாவது:-

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியை பொறுத்த வரை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, அந்தியூர் சட்டமன்ற தொகுதிகளில் எதிர்கட்சி அதிகளவில் ஓட்டுகளை பெற்றிருந்தது. அதே சமயம் எனது தொகுதியான பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் எதிர்கட்சி குறைந்த அளவே கூடுதல் ஓட்டுகளை பெற்றிருந்தனர்.

இதற்காக நானும் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களும் அந்த அளவுக்கு தீவிரமாக களம் இறங்கி பாடுபட்டோம். அ.தி.மு.க.வில் அதிகார பலம் படைத்தவர்கள் எதிர்கட்சிகளுக்கு அப்பட்டமாக துணை போனார்கள். அதையும் மீறி எதிர்கட்சி அதிக ஓட்டுகள் பெறாமல் தடுத்தோம். இது உண்மை

நமது கட்சியில் அதிகார பலத்தில் இருப்பவர்களின் துரோகத்தை கட்சி தலைமையிடம் ஆதாரத்துடன் கொடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை கட்சி தலைமை அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை. எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

அத்திக்கடவு-அவினாசி திட்டம், கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர அர்ப்பணிப்பு உணர்வுடன் நான் மக்கள் பணியாற்றி வந்திருக்கிறேன். இது எனது தொகுதி மக்களுக்கும் கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும் தெரியும். எதிர்கட்சிகாரர்களை விட சமாளித்து விடலாம். ஆனால் நமது கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை சமாளிக்கவே பெரும் சவாலாக இருக்கிறது.

கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது உரிய ஆதாரத்துடன் கொடுத்தும் கட்சி தலைமை கண்டுக் கொள்ளாமல் மவுனம் சாதிப்பது ஏன்? இந்த மவுனம் தொடர்ந்தால் அடுத்து வர உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அடிமட்ட தொண்டர்களை மதிக்காமல் இருப்பது நல்லதாக அமையாது.


அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையோ.. இரட்டை தலைமையோ எதையும் ஏற்க நான் தயாரக இருக்கிறேன். இந்த ஆட்சி நீடிக்க உறுதுணையாக இருக்கவே விரும்புகிறேன். அதேசமயம் கட்சி தலைமை அடிமட்ட தொண்டர்களையும் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

நான் அமைச்சராக இருந்தபோது பெருந்துறையில் மனமகிழ்மன்றம் பெயரில் செயல்பட்ட சூதாட்ட கிளப்பை அகற்றி அங்கு பேரூராட்சி அலுவலகம் கட்டிகொடுத்தேன்.

அந்த பகுதியில் மக்கள் ஆயிரக்கணக்கானோர் கூடும் சந்தை செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் அரசு டாஸ்மாக் மது பார் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது சூதாட்ட கிளப் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதை கண்டு என் தொகுதிமக்கள் என்னிடம் மதுக்கடை வேண்டாம். குடிக்க தண்ணீர் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு தெரியாமலேயே என் தொகுதியில் சூதாட்ட கிளப் அமைத்து இருக்கிறார்கள். இது எனக்கு பெரும் அதிர்ச்சி அளித்து உள்ளது.

இது முதல்-அமைச்சருக்கு தெரிந்துதான் நடந்துள்ளதா? இதற்கான அனுமதி முதல்வருக்கு தெரிந்துதான் கொடுக்கப்பட்டுள்ளதா? என எனக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இந்த சூதாட்ட கிளப்பை தடுத்து நிறுத்தாதது ஏன்?

பெருந்துறையில் இளைஞர்கள் அதிகம் வசிக்கும் பகுதி கல்லூரிகளும், பள்ளிகளும் நிறைந்த பகுதி. இங்கு அமைந்து உள்ள சூதாட்ட கிளப், டாஸ்மாக் பார் ஆகியவற்றால் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் கெடும் வாய்ப்பும் உள்ளது.

முதல்வர் அண்ணன் எடப்பாடியார் இதில் தலையிட்டு இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார்.
Tags:    

Similar News