செய்திகள்

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின கொண்டாட்டம்

Published On 2019-05-13 16:47 GMT   |   Update On 2019-05-13 16:47 GMT
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் செவிலியர்களால் கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர்:

மக்கள் நல்வாழ்வுக்காக இரவு, பகல், பண்டிகை நாட்கள் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய செவிலியர் சேவை புரிந்து வரும் செவிலியர்களின் பங்களிப்பு வெகுவாக பாராட்டத்தக்கது. இங்கிலாந்து நாட்டில் செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் 12–5–1820–ம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். அவர் செவிலியர் சேவையை தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அப்பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் பிறந்த மே 12–ம் நாள் உலக செவிலியர் தினமாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், ஊழியர்கள், நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்களுக்கு செவிலியர்கள் இனிப்பு கொடுத்தனர்.

அவர்கள் செவிலியர்களுக்கு, செவிலியர் தின வாழ்த்துக்களை கூறினர். எதிர்காலத்தில் செவிலியர் ஆக உள்ள மருத்துவமனையில் பயிற்சி பெறும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், செவிலியர்களுக்கு கை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் செவிலியர்கள் ஒருவருக்கொருவர் கை கொடுத்தும், கட்டி அரவணைத்தும் செவிலியர் தின வாழ்த்துக்களை கூறி பரிமாறி கொண்டனர். சில செவிலியர்கள் ஒன்று சேர்ந்து தங்களது செல்போனில் ‘செல்பி‘ எடுத்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் செவிலியர்கள் கட்டை விரலை உயர்த்தி தங்கள் இலக்கினை அடைவோம் என்று உறுதி எடுத்து கொண்டனர். சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்–அப் ஸ்டேட்டஸ்களில் சிலர் செவிலியர்களை என்னை பெற்றெடுத்த தாய் அரவணைக்கும் முன்பே என்னை அரவணைத்த தெய்வங்கள் என்று வாழ்த்தி பதிவிட்டிருந்தனர்.

 பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அரசு செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் என 200–க்கும் மேற்பட்டோர் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளில் சுழற்சி முறையில் பணிபுரிந்து நோயாளிகளுக்கு சேவையாற்று வருகின்றனர். மனம் கோணாது சேவையில் சிறந்து விளங்கும் செவிலியரை இன்னொரு தாய் என்று சொல்வது அர்த்தம் உள்ளதாகவே இருக்கும்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உலக செவிலியர் தினம் கொண்டாட்டப்பட்டது.
Tags:    

Similar News