செய்திகள்

காரைக்கால் மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

Published On 2019-04-06 03:31 GMT   |   Update On 2019-04-06 03:31 GMT
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை சிறைபிடித்து சென்றனர். #FishermenArrested
காரைக்கால்:

புதுவை மாநிலம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த 3-ந்தேதி காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த மீனவர்கள் தமிழ்மணி, செல்வமணி, தங்கமணி, மகேந்திரன், வீரப்பன், ரவிக்குமார், ரத்தினம் ஆகிய 7 பேர் ஒரு படகிலும், அரசமணி, மனோகரன், சந்திரன், கதிரேசன், சுபாஷ் ஆகிய 5 பேர் மற்றொரு படகிலும், அருணகிரி, மோகன், சேகர், தமிழ்மணி, முருகன், சாந்தன், ஆகிய 6 பேர் இன்னொரு படகிலும் என மொத்தம் 3 பைபர் படகுகளில் 18 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று அதிகாலை எல்லை தாண்டிச்சென்று இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், 18 மீனவர்களையும் சிறை பிடித்தனர். மேலும் அவர்களின் 3 பைபர் படகுகளையும் பறிமுதல் செய்து அவர்களை யாழ்ப்பாணம் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தகவல் அறிந்த காரைக்கால் கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த மீனவ கிராம பஞ்சாயத்தார் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கரனுடன் சென்று மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, மீன்வளத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி மனு கொடுத்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். #FishermenArrested

Tags:    

Similar News