பள்ளிகொண்டா அருகே மூதாட்டியை கொன்று நகை கொள்ளை
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அருகே உள்ள எஸ்.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி ஜானகி அம்மாள் (வயது 83). இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனி தனியாக வசித்து வருகின்றனர்.
கணவர் இறந்து விட்டதால் ஜானகி அம்மாள் அகரம்கேரி ஏரிகரையோரம் உள்ள விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அவரது மகன் வஜ்ரவேல் நிலத்தில் மாடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று இரவு மாடுகளுக்கு தண்ணீர் வைத்து விட்டு அவரது தாயாருக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வந்தார்.
தனியாக இருந்த ஜானகி அம்மாளை மர்ம நபர்கள் அருகே இருந்த பள்ளத்துக்குள் இழுத்து சென்று கல்லால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டுக்குள் சென்று ஜானகி அம்மாளின் 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை வஜ்ரவேல் அவரது நண்பர் ஆறுமுகம் ஆகியோர் பால்கறக்க நிலத்துக்கு சென்றனர். வீட்டில் ஜானகி அம்மாள் இல்லை. மேலும் அங்கிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. இதனைக் கண்டு திடுக்கிட்ட அவர்கள் தேடி பார்த்தனர். அப்போது ஜானகி அம்மாள் பிணமாக கிடந்ததை கண்டு அழுது துடித்தனர்.
இதுபற்றி பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் இரவு 11 மணிக்கு நிலத்தில் சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஜானகி அம்மாள் வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் இருந்த வாலிபர் ஒருவர் மாயமாகி உள்ளார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.