செய்திகள்
அறிவொளி

தமிழக கல்வித்துறையில் புத்தகங்கள் அச்சடிப்பில் கோடிக்கணக்கில் மோசடி - 4 பேர் மீது வழக்கு

Published On 2019-01-31 09:38 GMT   |   Update On 2019-01-31 09:38 GMT
தமிழக கல்வித்துறையில் புத்தகங்கள் அச்சடிப்பில் நடைபெற்ற மோசடி தொடர்பாக அதிகாரி அறிவொளி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #Arivoli
சென்னை:

தமிழக கல்வித்துறையில் “கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி மையம்” என்ற பெயரில் தனி பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனராக அறிவொளி உள்ளார்.

இந்த மையத்தின் சார்பில் கல்வி துறையை மேம்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். கல்வியில் எத்தகைய புதுமைகளை கொண்டு வரலாம் என்பது பற்றி இந்த மையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும்.

அந்த வகையில் ‘உலகமெல்லாம் தமிழ்’ என்ற திட்டமும் மாணவர்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டது. கனவு ஆசிரியர், சிட்டு ஆகிய 2 பெயர்களில் தனியாக புத்தகம் உருவாக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பொது அறிவை வளர்ப்பதற்கும், மொழித்திறனை மேம்படுத்தவும் இந்த நூல்கள் தயாரிக்கப்பட்டன. ‘உலகமெல்லாம் தமிழ்’ திட்டத்தின் கீழ் அனிமே‌ஷன் வீடியோக்களும் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் எழுத்துக்களை சரியாக உச்சரிப்பதற்கும், இசை மற்றும் நடனம் மூலம் எளிதாக கற்கும் வகையில் இந்த வீடியோ சி.டி. உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில்தான் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கல்வியியல் ஆராய்ச்சி மைய இயக்குனர் அறிவொளியின் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது உலகமெல்லாம் தமிழ் திட்டத்தின் கீழ் பாடப் புத்தகங்கள் அச்சடித்ததில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கல்வியியல் ஆராய்ச்சிக்காக வல்லுனர் குழுவை கூட்டாமல் போலியான ரசீதுகளை தயாரித்து மோசடி நடந்திருப்பதும் அம்பலமானது. இது தொடர்பாக ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து இயக்குனர் அறிவொளி, முறைசாரா கல்வி நிறுவனத்தின் இயக்குனர் லதா, உதவி பேராசிரியை சங்கீதா, பட்டதாரி ஆசிரியை சித்ரா, இடைநிலை ஆசிரியர் அமலன் ஜெரோன் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவர் மீதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முறைகேடு குற்றச்சாட்டின் கீழ் 5 பேர் மீதும் வழக்கு போடப்பட்டிருப்பதால் அனைவரும் விரைவில் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி.பி.ஐ. வளாகத்தில் சோதனை நடத்தியபோது கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அறிவொளியின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.  #Arivoli
 


Tags:    

Similar News