செய்திகள்

பொங்கலுக்கு பிறகும் விடுபட்டவர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கப்படும்- அமைச்சர் காமராஜ்

Published On 2019-01-14 08:18 GMT   |   Update On 2019-01-14 08:18 GMT
பொங்கல் பண்டிகை முடிந்தபின்னரும், விடுபட்டவர்களுக்கு பரிசுத் தொகை ரூ.1,000 வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். #PongalCashGift #MinisterKamaraj
சென்னை:

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு பொருட்கள், ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 7-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் தினமும் 200, 300 குடும்ப அட்டைகள் வீதம் பொங்கல் பொருட்கள் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டன. ஒரு வார காலமாக நடந்து வந்த வினியோகம் இன்றுடன் முடிகிறது. விடுபட்டவர்களுக்கு இன்று வழங்கப்பட்டன.



சென்னையில் 19 லட்சம் ரே‌ஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். 95 சதவீதம் கார்டுகளுக்கு பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் 10-க்கும் குறைவானவர்கள்தான் பொங்கல் பொருட்கள் வாங்காமல் இருந்தனர். விடுபட்டவர்களில் பெரும்பாலான மக்கள் இன்று வாங்கினார்கள்.

பொங்கல் பொருட்கள் பெரும்பாலும் வினியோகிக்கப்பட்டு விட்டதால் ரே‌ஷன் கடைகளில் கூட்டம் இல்லை. பொதுமக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியூரில் இருந்து வர முடியாதவர்கள் மட்டும் பொங்கல் பொருட்கள் மற்றும் பரிசை வாங்கவில்லை.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 97 சதவீதம் வரை பொங்கல் பரிசு 1,000 மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டதாகவும், விடுபட்டவர்களுக்கு பொங்கல் முடிந்த பின்னரும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். #PongalCashGift #MinisterKamaraj

Tags:    

Similar News