செய்திகள்

சம்பள உயர்வு வழங்காததை கண்டித்து அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம்

Published On 2019-01-11 11:40 GMT   |   Update On 2019-01-11 11:40 GMT
சம்பள உயர்வு வழங்காததை கண்டித்து அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமரைக்குளம்:

அரியலூரில் அரசுக்கு சொந்தமான சிமெண்ட் ஆலையில் 734 நேரடிபணியாளர்கள் மற்றும் 750 க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவிலான பணியாளர்கள் பணி ஓய்வு பெற்ற நிலையில் சுமார் 400 க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளம் உயர்த்தபடாமல் அதே ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசு தினக்கூலி தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியத்தினை நிர்ணயித்து அதனையே வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஊதியத்தினை அரியலூர் அரசு சிமெண்ட் தினக்கூலிதொழிலாளர்கள் நிர்வாகத்தினரிடம் கடந்த சிலஆண்டுகளாக கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஆலை நிர்வாகம் தரப்பில் பழைய ஊதியமே வழங்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சுமார் 400க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் ஆலையின் நுழைவு வாயிலில் நின்று கொண்டு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அறிந்ததும் ஆலை நிர்வாகத்தினர் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தொழிலாளர்கள் மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியம் வழங்குவதாக உத்திராவதம் அளித்தால் தான் மீண்டும் பணிக்கு திரும்புவோம் என தெரிவித்து தொடர்ந்து பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையின் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News