செய்திகள்

கொடுங்கையூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Published On 2019-01-11 09:14 GMT   |   Update On 2019-01-11 09:14 GMT
கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
பெரம்பூர்:

கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் மொத்தம் 94 கடைகள் உள்ளன.

வியாபாரிகள் சிலர் கடையை நடத்தாமல் முத்தமிழ்நகர் மெயின் ரோட்டில், சாலையோரத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. மேலும் வியாபாரிகள் வணிக வளாகத்தில் எடுத்த கடைக்கு முறையாக வாடகை மற்றும் வரி செலுத்தாமல் இருந்தனர்.

இதுபற்றி ஏராளமான புகார்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு வந்தன. இதையடுத்து இன்று காலை அதிகாரிகள் மங்களாராம சுப்பிரமணியன், காமராஜ், திருநாவுக்கரசு மற்றும் ஊழியர்கள் முத்தமிழ் நகரில் உள்ள வணிக வளாகத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர் அங்கு சாலையோரத்தில் அமைக்கப்பட்டு இருந்த கடைகளை இடித்து அகற்றினர். மேலும் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கவும் முடிவு செய்தனர்.

இதை தொடர்ந்து வியாபாரிகள் தங்களது வாடகை, வரி பாக்கியை உடனடியாக அதிகாரிகளிடம் கொடுத்தனர். அவர்களுக்கு அந்த இடத்திலேயே ரசீது வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.2 லட்சம் வரை வசூலானது.

வணிக வளாகத்தில் கடைகள் அமைக்க வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதற்கு முன்பு இதே போல 2 முறை சாலையோர கடைகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News