செய்திகள்

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் கொலை - கணவர் கைது

Published On 2019-01-02 16:26 GMT   |   Update On 2019-01-02 16:26 GMT
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் 5-வது தெருவைச் சேர்ந்தவர் சேதுராமன். இவருடைய மகன் மாரிமுத்து (வயது 28), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி விமலா (25). இவர்களுக்கு காவியா (4), ஸ்ரீவித்யா (2) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

மாரிமுத்து, அப்பகுதியில் தன்னுடைய குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாரிமுத்து அப்பகுதியில் உள்ள மற்றொரு வாடகை வீட்டில் தன்னுடைய குடும்பத்தினருடன் குடியேறினார். எனினும் பழைய வீட்டை காலி செய்யாததால், அங்கு சில பொருட்கள் இருந்தன.

அதே பகுதியைச் சேர்ந்தவர் குமார் (20), வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவருக்கும், விமலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவில் மாரிமுத்து தன்னுடைய குடும்பத்தினருடன் புதிதாக குடியேறிய வீட்டில் தூங்கினார். அப்போது நள்ளிரவில் கண் விழித்த விமலா, அப்பகுதியில் உள்ள தங்களது பழைய வீட்டுக்கு சென்றார். அவரை எதிர்பார்த்து, கள்ளக்காதலன் குமாரும் அங்கு தயாராக இருந்தார். பின்னர் அவர்கள் இருவரும் பழைய வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் அதிகாலை 5 மணியளவில் கண்விழித்த குழந்தை ஸ்ரீவித்யா தன்னுடைய தாயாரை காணாததால் அழுதாள். இதனால் கண்விழித்த மாரிமுத்து மனைவியை தேடினார். ஆனால் வீட்டில் விமலா இல்லாததால், மாரிமுத்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், அப்பகுதியில் உள்ள தன்னுடைய மாமனாரின் வீட்டுக்கு சென்று விமலாவை தேடினார். அங்கும் அவர் இல்லாததால், மாரிமுத்து தனது பழைய வீட்டுக்கு சென்று பார்த்தார்.

அங்கு விமலாவும், குமாரும் உல்லாசமாக இருந்தாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, இரும்பு கம்பியால் குமாரை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த குமார் அலறியடித்தவாறு வெளியே ஓடி விட்டார். மேலும், ஆத்திரம் தீராத மாரிமுத்து இரும்பு கம்பியால் தன்னுடைய மனைவியையும் சரமாரியாக தாக்கினார். இதில் விமலா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து மாரிமுத்து அக்கம்பக்கத்தில் உள்ள தன்னுடைய உறவினர்களிடம் தெரிவித்தார். பின்னர் அவர், கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பியுடன் சென்று, கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட விமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான குமாரையும் போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News