செய்திகள்

ஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்

Published On 2018-12-09 09:00 GMT   |   Update On 2018-12-09 09:00 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆணவ படுகொலை செய்யப்பட்ட சங்கர் மனைவி கவுசல்யா, பறை இசை கலைஞரை மறுமணம் செய்து கொண்டார். #Kausalyaremarry #Honourkilling #udumalaisankar

கோவை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் பழனியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் போது காதல் மலர்ந்தது. பின்னர் திருமணம் செய்து கொண்டனர். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் இந்த திருமணத்திற்கு கவுசல்யாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி உடுமலை பஸ் நிலையத்தில் சென்று கொண்டிருந்த போது சங்கர் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் சென்ற கவுசல்யா படுகாயம் அடைந்தார்.

இந்த ஆணவ படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக கவுசல்யா தந்தை சின்னசாமி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அதில் கவுசல்யா தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

சங்கர் படுகொலைக்கு பின்னர் கவுசல்யா தனது கணவர் பெயரில் சமூக நீதி அறக்கட்டளை நடத்தி வந்தார். சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக போராடி வந்தார். பெண்கள் ஒடுக்கப்படும் வி‌ஷயத்திலும் குரல் கொடுத்தார்.

இந்த நிலையில் இன்று கோவை வெள்ளலூரை சேர்ந்த பறை இசை கலைஞர் சக்தி (27) என்பவரை கவுசல்யா மறுமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் கோவை காந்தி புரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. சக்தி சார்பில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு. ராமகிருஷ்ணன் உறுதிமொழி வாசிக்க அதனை சக்தி வாசித்தார்.

கவுசல்யா சார்பில் கொளத்தூர் மணி உறுதிமொழி வாசித்தார். பின்னர் கவுசல்யாவும் - சக்தியும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து இருவரும் பறை இசை முழங்க சுயமரியாதை முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

கவுசல்யாவும், இவரும் காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டனர். சக்தி விஷூவல் கம்யூனிகேசன் படித்துள்ளார்.

கடந்த 10 வருடங்களாக நிமிர்வு என்ற பெயரில் பறை இசை குழு நடத்தி வருகிறார். பறை இசை பயிற்சியும் அளித்து வருகிறார்.  #Kausalyaremarry #Honourkilling #udumalaisankar

Tags:    

Similar News