செய்திகள்

மலேசியாவில் இருந்து மேலும் ஒரு கப்பலில் ஆற்று மணல் வந்தது

Published On 2018-11-28 15:18 IST   |   Update On 2018-11-28 15:18:00 IST
மலேசியாவில் இருந்து மேலும் ஒரு கப்பலில் ஆற்று மணல் வந்ததையடுத்து மேலும் 3 கப்பல்களில் மெட்ரிக் மணல் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. #EnnorePort
சென்னை:

தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை அரசே இறக்குமதி செய்து பொதுப்பணித்துறை மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் 21-ந் தேதி மலேசியாவில் இருந்து 56 ஆயிரத்து 750 மெட்ரிக்டன் ஆற்று மணல் சரக்கு கப்பல் மூலம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மணல் துறைமுக வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டு பொதுப்பணித்துறை மூலம் நேரடியாக ஒரு யூனிட் மணல் ரூ.10,350 என்ற விலையில் இணைய தளத்தில் பதிவு செய்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 21-ந் தேதி மலேசியாவில் இருந்து 52 ஆயிரத்து 68 மெட்ரிக் டன் ஆற்று மணல் கப்பலில் எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் 55 ஆயிரம் மெட்ரிக் டன் மலேசிய ஆற்று மணல் ஏற்றிய நிலையில் 3-வது கப்பல் எண்ணூர் துறைமுகத்துக்கு நேற்று வந்தது. ஏற்கெனவே 2-வது கப்பலில் வந்த மணல் விற்பனை இன்னும் தொடங்கப்படாத நிலையில் 3-வது கப்பலிலும் மணல் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் மழைக்காலம் என்பதால் உள்ளூர் மணலுக்கு தட்டுப்பாடு ஏற்படும். எனவே ஒரே வாரத்தில் 2 கப்பல்களில் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 3 கப்பல்களில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் மணல் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. #EnnorePort
Tags:    

Similar News