செய்திகள்

திருப்போரூர் அருகே பள்ளம் தோண்டும்போது 4 சாமி சிலைகள் கிடைத்தன

Published On 2018-10-19 06:54 GMT   |   Update On 2018-10-19 06:54 GMT
திருப்போரூர் அருகே பள்ளம் தோண்டும்போது கிடைத்த 4 சாமி சிலைகளும் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
திருப்போரூர்:

திருப்போரூர் அருகே வெண்பேடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேஷ். இவருடைய வீடு அங்குள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ளது.

நேற்று ராஜேஷ், தனது வீட்டின் அருகே எரு போடுவதற்காக பள்ளம் தோண்டினார். அப்போது பூமிக்கு அடியில் பெரிய கற்கள் இருப்பது போல தெரிந்தது. மேலும், தோண்டியபோது 4 கற்சிலைகள் இருந்தன. அவற்றை வெளியே எடுத்து பார்த்தபோது அவை பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சக்கரத்தாழ்வார் சாமி சிலைகள் என்பது தெரிய வந்தது. அவை 2 அடி உயரம் இருந்தன.

உடனே இதுகுறித்து திருப்போரூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாசில்தார் ராஜ்குமார் நேரில் சென்று சிலைகளை பார்வையிட்டார்.

இதையடுத்து 4 சிலைகளும் திருப்போரூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அவை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

தாசில்தார் அலுவலகத்தில் இருந்த சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். சிலர் சிலைகளை தொட்டு வணங்கினார்கள்.

Tags:    

Similar News