செய்திகள்

நாளை முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்

Published On 2018-10-18 16:28 GMT   |   Update On 2018-10-18 16:28 GMT
மாதவரம் புதிய அடுக்கு மாடி பஸ் நிலையத்தில் இருந்து நாளை முதல் ஆந்திர மாநிலத்திற்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. #madhavaramnewbusstand
சென்னை:

சென்னை கோயம்பேட்டில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாதவரத்தில் கீழ்தளம், மேள்தளத்துடன் மாடி பஸ்நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 2011-ம் ஆண்டு அறிவித்தார்.

இதையடுத்து பஸ்நிலையம் அமைப்பதற்காக மாதவரம் ரவுண்டானா அருகே 8 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய பஸ்நிலையத்தை அமைத்து நிர்வகிக்கும் பொறுப்பு பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ.) ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது.

தற்போது மாடி பஸ் நிலைய கட்டிடம், டிரைவர்கள்-கண்டக்டர்கள், பயணிகள் ஓய்வு எடுப்பதற்காக விசாலமான அறைகள், ஓட்டல்கள், வணிக வளாகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை போன்றவை நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது.

கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தனித்தனியாக நிறுத்துவதற்கு பார்கிங் வசதி, இலவச குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சமூக விரோதிகள், திருடர்கள் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக நவீன சுழலும் கண்காணிப்பு கேமராக்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறை போன்ற பாதுகாப்பு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அக்டோபர் 10-ம் தேதி  மாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்தநிலையில், மாதவரம் மாடி பஸ் நிலையத்தில் இருந்து காளகஸ்தி, திருப்பதி, நெல்லூர், விஜயவாடா என ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு, பாரிமுனை போன்ற பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.

எனவே பஸ் நிலையத்தின் மேல் தளத்தில் 50 பஸ்களும், கீழ் தளத்தில் 42 வெளியூர் பஸ்களும்(ஆந்திரா மார்க்கம்), 9 மாநகர பஸ்களும் நிறுத்த கூடிய வகையில் பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்நிலையத்துக்கு ‘இண்டர்சிட்டி பஸ் டெரிமினல்’ (நகரத்தின் உள்ளே, வெளியே செல்லும் பஸ் முனையம்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் கோயம் பேடு பஸ்நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது . நாளை முதல் மாதவரம் புதிய அடுக்கு மாடி பஸ்நிலையத்தில் இருந்து ஆந்திர மாநில பஸ்கள் மற்றும் தமிழக பஸ்கள் ஆந்திர மாநிலத்திற்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #madhavaramnewbusstand
Tags:    

Similar News