செய்திகள்

புதுவை துறைமுகத்தில் இருந்து 3 மாதத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்கப்படும்- அமைச்சர் கந்தசாமி

Published On 2018-10-13 11:51 GMT   |   Update On 2018-10-13 11:51 GMT
புதுவை துறைமுகத்தில் இருந்து 3 மாதத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை துறைமுகத்தில் மீண்டும் சரக்கு போக்கு வரத்து தொடங்க அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. இதற்காக துறைமுக வளாகத்தில் குடோவுன்கள் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது.

சென்னைக்கு வரும் கப்பல்களில் உள்ள கண்டெய்னர்களை புதுவைக்கு எடுத்து வந்து இங்கிருந்து கனரக வாகனங்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புவது தொடர்பாக துறைமுக கழகத்தோடு புதுவை அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

சரக்கு போக்குவரத்து தொடங்கும் என பல மாதமாக அரசு கூறி வந்தாலும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இதனிடையே துறைமுகத்திற்குள் பார்ஜர், கப்பல்கள் வர வேண்டும் என்றால் வம்பாகீரப்பாளையம் முகத்துவாரத்தின் வழியாகவே வர முடியும். இதன் வழியாகவே மீன்பிடி கப்பல்கள் கடலுக்கு செல்கிறது. இந்த முகத்துவாரம் அடிக்கடி மணலால் மூடி விடுகிறது.

கடந்த மாதம் 10-ந்தேதி முதல் மீன்பிடி படகுகள்கூட செல்ல முடியாத அளவு முகத்துவாரம் மணலால் மூடியது. இந்த முகத்துவாரத்தை தூர்வார வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முகத்துவாரத்தை தூர்வாரும் பணி தொடங்கியுள்ளது.

இந்த பணியை அமைச்சர் கந்தசாமி ஆய்வு செய்தார். முகத்துவார பகுதிக்கு வந்த அமைச்சர் கந்தசாமி துறைமுக அதிகாரிகளிடமும், தூர்வாரும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களிடமும் நடைபெறும் பணிகள் குறித்து பேசினார். அவருடன் அன்பழகன் எம்.எல்.ஏ., துறைமுக செயற்பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இதன்பின் அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.1.78 கோடி செலவில் துறைமுக முகத்துவாரம் தூர்வாரப்படுகிறது. 60 ஆயிரம் கியூபிக் மீட்டர் மணலை அகற்ற திட்டமிட்டுள்ளோம். இந்த பணி 3 மாதத்தில் நிறைவடையும். மேலும் நிரந்தரமாக மணலை அகற்ற ரூ.4 கோடியில் திட்டமிட்டுள்ளோம். முகத்துவாரம் தூர்வாரும் பணி முடிவடைந்தவுடன் துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்தும் செயல்பட தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News