செய்திகள்

அனுமதி இல்லாமல் செயல்பட்ட 130 ஆழ்துளை கிணறுகள் இடித்து அகற்றப்பட்டன

Published On 2018-10-13 09:24 GMT   |   Update On 2018-10-13 09:24 GMT
பூந்தமல்லியில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த 130 ஆழ்குழாய் கிணறுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

பூந்தமல்லி:

பூந்தமல்லி தாலுகாவுக்கு உட்பட்ட சென்னீர்குப்பம், காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி உள்ள பகுதிகளில் அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு இயங்கி வந்தன.

இந்த கிணறுகளில் லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு விற்கப்படுவதாகவும் இதனால் நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் புகார் வந்தது.

அதிக அளவில் லாரிகள் செல்வதால் இந்த சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறி விட்டது. எனவே இதன் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வருவாய் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட உதவிகலெக்டர் ரத்னா தலைமையில் பூந்தமல்லி தாசில்தார் புனிதவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் வரு வாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அனுமதி இன்றி செயல்பட்டு வந்த ஆழ்குழாய் கிணறுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினார்கள்.

மேலும் அங்கு கொடுக்கப்பட்டு இருந்த மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, போர்வெல், மிஷின்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News