செய்திகள்

திருவள்ளூர் அருகே செங்கல் சூளை அதிபர் கொலை - கைதான 8 பேர் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2018-10-01 13:42 IST   |   Update On 2018-10-01 13:42:00 IST
திருவள்ளூர் அருகே செங்கல் சூளை அதிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஊருக்குள் வந்தால் தீர்த்து கட்டி விடுவோம் என கூறியதால் கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மேல்மணல்பேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். செங்கல் சூளை அதிபர். கடந்த 26-ந்தேதி காலை அவரை வீட்டு வாசலில் மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், தினேஷ், வீரா, இளங்கோவன், கவிக்குமார், ஸ்டீபன்ராஜ், இளமுருகன், விக்ரம் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான ராஜேஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

வெங்கட்ராமனின் அண்ணனான முன்னாள் ஊராட்சி தலைவர் தங்க ராஜை முன்விரோதம் காரணமாக 2016-ம் ஆண்டு வெட்டி கொன்றோம். இந்த வழக்கில் கைதான நாங்கள் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தோம். ஊருக்குள் நாங்கள் வந்தால் கொலை செய்து விடுவேன் என எங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வெங்கட்ராமன் கூறி வந்தார். மேலும் எங்களின் நிலத்தை விற்கவும் அவர் தடையாக இருந்தார்.

வெங்கட்ராமன் உயிருடன் இருந்தால் எங்களின் உயிருக்கு ஆபத்து என்று கருதி அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி கடந்த 26-ந் தேதி அவருடைய வீட்டுக்குள் புகுந்து அவரை வெட்டி கொன்றோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தங்கராஜை கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த ராஜேஷ், தினேஷ் மற்றும் வீரா ஆகிய 3 பேரும் இந்த கொலை வழக்கில் கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கைதான 8 பேரும் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News