செய்திகள்
சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலையையும், உடைக்கப்பட்ட கைத்தடி கீழே கிடப்பதையும் படத்தில் காணலாம்.

திருச்சி அருகே பெரியார் சிலையின் கைத்தடியை உடைத்து கீழே வீசிய மர்ம நபர்கள்

Published On 2018-09-24 05:30 GMT   |   Update On 2018-09-24 05:30 GMT
திருச்சி அருகே பெரியார் சிலையில் கைத்தடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PeriyarStatue
திருச்சி:

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அல்லித்துறை பஸ் நிறுத்தத்தில் பெரியார் சிலை உள்ளது. கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த முழு உருவச்சிலை கடந்த 14.7.1991-ல் அமைக்கப்பட்டது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார்.

இந்த சிலை அருகில் உள்ள கரும்பலகையில் அப்பகுதி திராவிடர் கழகத்தினர் தினமும் பெரியாரின் வாசகங்களை எழுதி வருவது வழக்கம். அதன்படி இன்று அதிகாலை 4.45 மணிக்கு வாசகங்களை எழுத, ஒன்றிய திராவிடர் கழக தலைவர் செபாஸ்டியான் என்பவர் அங்கு சென்றார்.

அப்போது பெரியார் சிலையின் 5 அடி உயர கைத்தடி சிலையில் இருந்து உடைந்து விழுந்து கீழே கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், திராவிடர் கழக நிர்வாகிகளுக்கு தெரிவித்தார். இதனால் அங்கு பொதுமக்களும், திராவிடர் கழகத்தினரும் திரண்டனர்.

இது குறித்து சோமரசம்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பெரியார் சிலையில் இருந்த கைத்தடியை வேண்டுமென்றே உடைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து செபாஸ்டியான் போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

பெரியார் சிலையில் சேதமான பகுதியை சீரமைக்கும் பணியில் திராவிடர் கழகத்தினர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியார் பிறந்த நாளன்று சென்னையில் பெரியார் சிலையை அவமதித்த பா.ஜ.க.வை சேர்ந்த வக்கீல் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சியில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #PeriyarStatue
Tags:    

Similar News