செய்திகள்

அண்ணா அறிவாலயத்தில், நாளை ஆர்.எம்.வீரப்பன் 93-வது பிறந்த நாள் விழா

Published On 2018-09-08 15:41 IST   |   Update On 2018-09-08 15:41:00 IST
முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர். கழகத் தலைவருமான ஆர்.எம்.வீரப்பனின் 93-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. கலைஞர் அரங்கில் ஆர்.எம்.வீரப்பன் பிறந்தநாள் விழா எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் நடக்கிறது.
சென்னை:

முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர். கழகத் தலைவருமான ஆர்.எம்.வீரப்பனின் 93-வது பிறந்தநாள் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை காலை அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களுக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் தியாகராய நகர் திருமலைப்பிள்ளை தெருவில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். எம்.ஜி.ஆர். கழக நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள், பல்வேறு கட்சி பிரமுகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

மாலை 6 மணிக்கு தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் ஆர்.எம்.வீரப்பன் பிறந்தநாள் விழா எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் நடக்கிறது. விழாவுக்கு நீதிபதி எஸ்.மோகன் தலைமை வகிக்கிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தொழிலதிபர் பழனி பெரியசாமி, எம்.ஜி. ஆர். கழக மகளிர் அணி செயலாளர் அபிராமி உள்பட பலர் ஆர்.எம். வீரப்பனுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவன செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் வரவேற்று பேசுகிறார். சாரதா நம்பி ஆரூரன் தமிழ்த் தாய் வாழ்த்து பாடுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். கழக பொதுச் செயலாளர் டி.ராமலிங்கம் செய்துள்ளார்.
Tags:    

Similar News