செய்திகள்

சென்னை மாநகர பேருந்தில் பட்டாக்கத்தியுடன் வந்து ரகளை - கல்லூரி மாணவர் கைது

Published On 2018-08-30 08:20 GMT   |   Update On 2018-08-30 08:20 GMT
சென்னையில் இன்று கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் அரசுப் பேருந்தில் பயணம் செய்தது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. #StudentsCarryingKnives #PublicNuisance
சென்னை:

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது பல்வேறு இடங்களில் எல்லை மீறும் வகையில் நடந்துகொள்கின்றனர். சில நேரங்களில் கத்தி போன்ற ஆயுதங்களுடன் பேருந்தில் பயணம் செய்வது பயணிகளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது.

தலைநகர் சென்னையைப் பொருத்தவரை ஒவ்வொரு வழித்தடத்திலும் ‘ரூட் தல’ என்ற பெயரில் ஒரு சில மணவர்கள் தலைவன் போன்று செயல்படுகிறார்கள். இவர்கள் தலைமையிலான மாணவர் பட்டாளம் செய்யும் அட்டகாசம் அதிகரித்தவண்ணம் உள்ளது. மாணவர்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போது, சிலர் பட்டாக்கத்தியுடன் பேருந்தில் வந்து மிரட்டுகின்றனர். இது தொடர்பாக இந்த ஆண்டின் துவக்கத்தில் சில மாணவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர்.

இந்நிலையில், இன்றும் அரசு பஸ்சில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் படியில் பயணம் செய்து அட்டகாசம் செய்தனர். மாநிலக்கல்லூரி நோக்கி சென்ற பேருந்தில் ஒரு மாணவன் படிக்கட்டில் அமர்ந்தபடி, பட்டாக்கத்தியை சாலையில் தீப்பொறி பறக்க உரசிக்கொண்டு வந்துள்ளான். இந்த மாணவனின் செயலைப் பார்த்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.



பொதுவெளியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கத்திகளுடன் பயணம் செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக மாநில கல்லூரி முதல்வரிடம் சென்னை அண்ணா சதுக்கம் போலீசார் விசாரித்தனர். பின்னர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவன் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். #StudentsCarryingKnives #PublicNuisance
Tags:    

Similar News