செய்திகள்

மதுரையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 1-ந் தேதி தொடங்குகிறது

Published On 2018-08-28 11:43 GMT   |   Update On 2018-08-28 11:43 GMT
மதுரையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.
மதுரை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 1199 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர், நகராட்சி ஆணையாளர், தலைமைச் செயலகத்தில் உதவிப்பிரிவு அலுவலர் மற்றும் வருவாய் உதவி ஆய்வாளர் போன்ற பணியிடங்கள் போட்டித் தேர்வின் வாயிலாக நிரப்பப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 9.9.2018 ஆகும்.

இந்தப்போட்டி தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பட்டப்படிப்பாகும். போட்டித்தேர்வுக்கு உடனடியாக விண்ணப்பித்து தமிழக அரசின் குரூப்-பி அதிகாரியாகும் வாய்ப்பினை வேலைநாடும் பட்டதாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

போட்டித்தேர்வினை எதிர்கொண்டு எளிதில் வெற்றி வாய்ப்பினை பெறும் வகையில் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக வருகிற 1-ந் தேதி முதல் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க பயிற்றுநர்களை கொண்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளது.

மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்காக தயாராகும் போட்டியாளர்கள் பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தினந்தோறும் செயல்பட்டு வருகிறது.

பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் மாதாந்திர பத்திரிகைகள் கொண்ட நூலகம் பராமரிக்கப்பட்டு இதில் வேலை நாடுநர்கள் உறுப்பினர்களாக இணைந்து பயன்பெறலாம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 11-2-18 அன்று நடத்தப்பட்ட 9351 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வில் தன்னார்வ பயிலும் வட்டம் மற்றும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் பயின்று பயிற்சி பெற்று 18 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ள விவரங்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகுமாறு துணை இயக்குநர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News