செய்திகள்

கருவடிகுப்பத்தில் புதிய மதுக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2018-08-27 10:03 GMT   |   Update On 2018-08-27 10:03 GMT
கருவடிகுப்பத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த கடைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
புதுச்சேரி:

கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோவில் அருகில் கள்ளுக்கடை, சாராயக்கடை இயங்கி வருகிறது.

இந்த கடைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் மதுபான கடை புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் ராஜா, பாண்டி ஆகியோர் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் சபாநாயகர் வைத்திலிங்கம், கலால்துறை ஆணையாளர் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தனர்.

கருவடிகுப்பம் சித்தானந்தா கோவிலை சுற்றி கென்னடி கார்டன், தவமணிநகர், ஜெகராஜ் நகர், சங்கரதாஸ் சுவாமிகள் நகர், ஓம்சக்திநகர், சாமிபிள்ளை தோட்டம், அனுக்கிரஹா குடியிருப்பு உள்ளிட்ட மக்கள் வசிக்கும் பகுதிகள் உள்ளது.

இங்கு ஏற்கனவே கள்ளுக்கடை, சாராயக்கடை உள்ளது. இந்த கடைகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பில் புகார் அளித்து வருகிறோம்.

இந்நிலையில் புதிதாக மதுபான கடை அமைக்க கலால்துறை அனுமதித்துள்ளது. இதனால் இங்கு பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது.

எனவே கலால்துறை ஆய்வு செய்து மக்களுக்கு இடையூறாக உள்ள இந்த கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News